அத்தியாயம் 12
பூங்கொடிகளைப் பற்றிக்கொண்டு இரண்டு மாடிகளைக் கடந்து கீழே இறங்கிவிடலாம். சற்று சிரமமேயாயினும், வெளியே செல்ல வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிய விபுநந்தனை மறுத்துவிட்டாள் ஆரவி. அரூபப் பெண் இவளிடம் ஏதோ கூற விழைவதை, என்னவென்று கேட்க வேண்டும் என்ற எண்ணமே அதற்கு காரணம்! அது மட்டும் தான் காரணமா? தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று தன்னை அவள் புறம் ஈர்க்கின்றது என்பது மட்டும் திண்ணம்.
கீழே வந்தவன் சோஃபாவில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். இவள் என்னதான் விளையாட்டாக பேசி திசைதிருப்ப முயன்றாலும் அசைந்தானில்லை.
இவள் தான் இறங்கி வந்து, "அவ்ளோ உயரத்துல இருந்து எப்டி இறங்கறது விபு? அதான்..." என்று இழுத்தாள்.
"டோண்ட் ஆக்ட் லைக் அ ஸ்மால் கிட், ஆரவி! இப்ப நமக்கு இருக்க ஒரே வழி அது தான். கொஞ்சம் சிரமப்பட்டா வெளில போய்டலாம்..."
"அதில்லப்பா…"
"ஐ'ம் நாட் யெட் ஃபினிஷ்ட்!" என்றதும், இவனுக்கென்ன இவ்வளவு கோபம் வருகிறது என்று மலைத்துப் போனாள்.
"இப்டியே நீ மயங்கி விழுந்திட்டே இருந்தா என்ன பண்றது? சிரிப்பு சத்தம் கேக்குது, பாட்டு சத்தம் கேக்குதுனு உளருற! கூப்பிட கூப்பிட காதுல வாங்காம பித்து பிடிச்ச மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க. இதுக்கு மேலயும் இங்கேயே இருந்தா மெண்டல் ஹாஸ்பிடலுக்கு தான் போகணும் நீ!"
"இனி மயங்க மாட்டேன். ப்ராமிஸ்!" என்று அவன் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எழுந்து சென்று இருவருக்குமாக காபி தயாரித்து எடுத்து வந்தாள்.
வாங்கிப் பருகியவன், "மொட்டை மாடில இருந்து தானே இறங்க முடியாது? வேற வழில போனா உனக்கு ஓகே தான?" கிச்சனில் இருக்கும் எக்ஸார்ஸ் ஃபேனைக் கழட்டிவிட்டு, முயற்சித்து பார்க்கலாம் என்று சிந்தித்தபடியே இவன் கேட்க,
முதலில் திருதிருத்தவள் பின், "எப்டி? தெலுங்கு பட ஹீரோ மாதிரி கையாலேயே ஜன்னலை வளைக்கப் போறியா? உன் வீக் பாடி அதைத் தாங்குமா?" என்று அவன் வசனத்தை அவனுக்கே பேசிக் காட்ட, கோபத்தின் உச்சத்தில் இருந்தவன் காபி புரையேற சட்டென்று சிரித்துவிட்டான்.
"ஹப்பாடி! சிரிச்சிட்டியா?" என்று சலுகையாய் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
விபுநந்தனுக்கு தெளிந்த நீரோடையில் தெரியும் பிம்பமாய் அவள் மனம் புரியவே செய்தது. இருப்பினும், தற்போது தன் காதலை உரைக்காது மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடிவு செய்தான்.
முடிவெடுப்பது சுலபம்! அதை செயல்படுத்துதல் சிரமமல்லவா? அதுவும் கையணைப்பில் காதல்காரியை வைத்துக்கொண்டு இவன் நினைப்பது நடந்துவிடுமா என்ன?
அன்றைய இரவு உணவிற்கு பின் இருவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர். ஆரவி எதையோ நினைத்துக்கொண்டு தூங்காமல் அமர்ந்திருந்தாள்.
வேறொன்றுமில்லை. இவள் எழுதிய கதையில் இரவில் வீட்டை ஒட்டிய மரத்திலிருந்து, நாயகியையேப் பார்க்கும் ஆந்தை ஒன்று பறந்து வந்து, தன் அலகால் திறந்திருக்கும் ஜன்னல் கண்ணாடியைக் கீறிவிட்டு கொண்டே இருக்கும். எழுந்து சென்று ஜன்னலை மூடலாம் என்றால் ஆந்தை உள்ளே வந்து விடும். மேலும், அங்கிருக்கும் துர்ஆன்மா நாயகியை, 'வெளியே வா!' என்று அழைத்துக்கொண்டே இருக்கும்.
எழுதும் போது இல்லாத அச்சம் இப்போது ஆரவியை ஆட்டிப்படைத்தது. இந்த வீட்டில் நான்கு இரவுகளைக் கழித்தாயிற்று. ஆனால் கதையைப் போலல்லாது தன்னை நிம்மதியான உறக்கம் தழுவியதெப்படி? இன்று மட்டும் மனம் பயத்தால் சஞ்சலப்படுவதேன்? கேள்விகளுக்கு விடையாக, இங்கும் ஓர் ஆன்மா இருப்பது இன்று தனக்கு உறுதியாக தெரிந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.
அந்த பெண் யாராக இருக்கக்கூடும்? தன் கதையில் வரும் ஆன்மாவிற்கு முற்றிலும் மாறுபட்டு, ஓர் தேவ அம்சம் பொருந்தியவள் போல் தேஜஸுடன் இருப்பவள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?
ஒருவேளை இப்போது தான் தன் கண்களுக்கு புலப்பட்டதால் இனி தான் அவள் வேலையைக் காட்டுவாளோ? இவளால் தனக்கும் விபுவிற்கும் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ? நாம் ஏன் அவள் கோரிக்கைக்கு செவி சாய்த்தோம்? விபு சொன்னவுடன் கீழே இறங்கியிருக்கலாமோ? அல்லது விபுவிடமாவது அவளை சொல்லியிருக்கலாமோ?
என்ன முயன்றும் ஆரவியால் இயல்பாக இருக்க முடியவில்லை. அச்சத்தைப் போக்க முடியவில்லை. தூக்கமும் வந்தபாடில்லை. வேறு வழியின்றி கட்டிலை விட்டு இறங்கியவள் அறையிலிருந்து வெளியேறினாள்.
விபுநந்தனின் அருகே இருந்து கொண்டால் எந்த பயமும் இல்லாமல், ஓர் பாதுகாப்பு உணர்வு கிடைக்கும் என்றெண்ணினாள். எனவே அவனின் அறை வாசலுக்கு வந்து நின்று, "விபு!" அழைத்தபடி கதவில் கை வைக்க, தாழ் போடாத கதவு உடனே திறந்துகொண்டது.
இங்கு வந்ததிலிருந்தே நந்தன் அவனறைக்கு தாழ் போடுவதில்லை. இயல்பாகவே ஆரவிக்கு தான் தான் துணை என்ற எண்ணம் வந்துவிட்டிருக்க வேண்டும். இந்த காட்டுக்குள் இருக்கும் வீட்டிற்குள் அவளுக்கு எந்த நேரத்திலும் அவசர உதவி தேவைப்படலாம் என்று நினைத்து கதவைப் பூட்டாமலே வைத்திருந்தான்.
அவனும் அப்போது தான் படுத்திருப்பான் போலும். கண்களை மட்டும் மூடியிருந்தவன் ஆரவியின் குரலில் எழுந்துவிட்டான்.
ஆனால் இவள் ஏன் வாசலில் நின்றவாறே இப்படி கோபத்தில் கண்கள் சிவக்க நிற்கின்றாள்? பயந்து போய் வந்தவளுக்கு இப்போது ஏன் இத்தனை கோபமாம்? அதுவும் நந்தனைப் பார்க்காமல் அவனுக்கு அருகே பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிறாள்? அவனைத் தேடி வந்துவிட்டு, இப்போது எழுந்தவனை கவனிக்காமல் இப்படி குரோதப் பார்வைப் பார்த்தால் என்ன அர்த்தமாம்?
வேறொன்றுமில்லை! ஆரவி கதவில் கை வைத்த மறுநொடி கதவு திறந்து கொண்டதல்லவா? உள்ளே விழி மூடி படுத்திருந்த விபுநந்தனின் நெற்றியில் அந்த அரூபப் பெண் முத்தமிட்டு கொண்டிருந்தது, தலைமாட்டில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. பார்த்ததும் ஆரவிக்கு பயம் போய் கோபம் தலைக்கேறிவிட்டது.
ஆனால் அவள் நம் ஆரவியைப் பார்த்ததும் மென்மையான, நட்பு புன்னகையையேத் தந்தாள்.
அதற்குள் ஏற்கனவே எழுந்திருந்த விபுநந்தன் குழல் விளக்கைப் போட்டு விட்டு, "என்னாச்சு பேபி? உள்ளே வா!" எனவும்,
உள்ளே வந்தவள் தனக்கு புன்னகையைத் தந்தவளுக்கு, ஜொலிக்கும் நெருப்பு துண்டு விழிகளால் வெளியே செல்லுமாறு கட்டளையிட்டாள். அந்த பெண்ணும் ஏதோ புரிந்தாற் போல் வெளியேறிவிட்டாள்.
"மாமி! என்னாச்சுன்னு கேட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா கண்ணகி பார்வை பார்த்துட்டு இருக்க?"
"ம்ம்? நத்திங் விபு!"
"ப்ச்! எது கேட்டாலும்... 'நத்திங் விபு!' இந்த நாலு நாளைல இந்த ரெண்டு வார்த்தைய தான் அதிகம் பேசற நீ!" சலிப்பாக கையசைத்துக் கூறியவன், இடுப்பில் கை வைத்து திரும்பி நின்றுகொண்டான்.
ஒரு முறைத் தயக்கமாய் அந்த அறையை சுற்றி வந்தன, அச்சம் தாங்கிய அஞ்சன விழிகள்! விபுநந்தன் அருகே இருந்த மேசையில் கர்வமாய் வீற்றிருந்தது, ஒரு கருப்பு நிற நிகான் டிஜிட்டல் கேமரா! அதன் விலை அதிகமில்லை. லட்சத்திற்கு பத்தாயிரம் குறைவு. அவ்வளவே!
மெதுவாக வந்து அவன் தோள் தொட்டவள், கருத்தில் பதியாத அந்த கேமராவின் மீது பார்வையைப் பதித்து, "அது வந்து… அங்கே நேக்கு தனியா தூங்க பயமா இருந்தது. அதான் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இங்க…" என முடிக்கும் முன்,
பட்டென்று திரும்பி, "எது? நீ இங்கே தூங்கவா? ஓ மை காட்! இத்தனை நாள் நான் கட்டி காத்து வந்த என் கற்பு என்னாகறது? ஒழுங்கா ஓடிப் போய்டு!" என்று ஏகத்திற்கும் அலறினான். சும்மாவே அவள் அருகாமையில் இழுத்து பிடித்த மூச்சோடு இருப்பவன் இன்று அருகே தூங்கினால் என்னவாகிப் போவானோ?!
இந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியைக் கீழேயுள்ள இணைப்பைத் தொட்டு வாசிக்கலாம்🌿🌸
Comments
Post a Comment