ஸ்கார்பியோ காதல் - 13.1

அத்தியாயம் 13.1
“இன்னொரு பூரி வச்சுக்கோடி!” என்ற அம்மா அம்பிகாவின் கேள்விக்கு பதிலளிக்காமல், பிட்டு எடுத்த பூரித் துண்டைக் கையில் வைத்துக்கொண்டு சிந்தனையில் மூழ்கியிருந்தாள் அம்ருதா.
“என்ன யோசனை அம்ரு?” என்ற நடராஜனின் அழுத்தக்குரலில் சிந்தனைக் கலைந்தவள்,
“ம்ம்? என்னப்பா?” எனக் கேட்க,
அவள் தலையில் தட்டிவிட்டு, “சாப்பிடும்போது என்ன யோசனை? இன்னொரு பூரி வச்சுக்கோன்னு சொன்னேன்.” என்றார் அம்பிகா.
“போதும்மா!” என்று தட்டிலிருந்ததை உண்டுவிட்டு எழுந்து கைக் கழுவச் சென்றாள்.
நடராஜன் மனைவியிடம் கேட்டார். “ஹரி கால் பண்ணானா?”
“ம்ம், பண்ணான். ஹாஸ்பிடல்ல அவனோட பேஷண்ட் யாருக்கோ எமர்ஜென்சின்னு கால் பண்ணாங்களாம். அதான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே கிளம்பி வர டிரைப் பண்றேன்ம்மான்னு சொன்னான்.”
“எமர்ஜென்சிக்கு பார்க்கறதுக்கு இவனை விட்டா வேற டாக்டர்ஸே யாரும் இல்லயாமா?”
“அந்த பேஷண்ட் பொண்ணு இவன்கிட்ட தான் மனசு விட்டு பேசறாளாம். அவங்க ஃபேமிலி நம்ம ஹரியை தான் ரெஃபர் பண்றாங்க போலருக்குது. ஹாஸ்பிடல் வந்துட்டு பர்ஸ்னலா இவன் பேரைச் சொல்லி கேட்டுட்டு போறாங்களாம். அதான் உடனே கிளம்புறேன்னு சொல்றான்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். வேலை எப்பவும் இருக்கத் தான் செய்யும். ப்ளான் பண்ண படி அவனை இருந்து வரச்சொல்லு.”
“சரி.”
கைக் கழுவியவாறே பெற்றோரின் உரையாடலைக் கேட்ட அம்ருவிற்கு உள்ளுக்குள் பய உணர்வு தொற்றிக்கொண்டது. அண்ணன் சீக்கிரம் வந்துவிட்டால் அஸ்வத்தை இனி பார்க்க முடியாது. வீராவேசமாக அவனுக்கு உதவுகிறேன் என்று வேறு சொல்லியிருக்கிறாள்.
சிந்தனையோடே தன்னறைக்கு வந்து படுக்கையில் விழுந்தவள் நேற்று அஸ்வத் சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.
“ரேவதி இஸ் நோ மோர்!”
“வாட்?!”
அஸ்வத் அலட்சியமாகத் தோள் குலுக்கினான்.
“எப்டி? அப்போ அவளோட குழந்தை?”
“ஆக்ஸிடென்ட் டாக்டர். உங்ககிட்ட பாதிதானே சொன்னேன். இன்னும் மிச்ச கதை இருக்குதே!”
அம்ருதா அவன் சொல்வதைக் கேட்டபடி கட்டிலில் அமர, அது புரிந்தோ அல்லது இயல்பாகவோ வெளியேறி கூடத்திலிருந்த நீள்விரிக்கையில் வந்து அமர்ந்தான் அவன். இவள் அதையெல்லாம் உணராமல் அவன் பின்னேயே வந்து தானும் ஓர் இருக்கையை ஆக்ரமித்துக் கொண்டாள்.
“அம்முக்குட்டி மயங்கி விழுந்த அன்னிக்கு காலைல அவளுக்கு பிடிக்காத பொங்கல்ன்னு சாப்பிட அடம்பிடிச்சா! எனக்கும் டைமாச்சுன்னு கார்ல போகும்போது ரெண்டு பிரெட் மட்டும் சாப்பிட வச்சேன். ஸோ காலைல சரியா சாப்பிடாததால தான் இந்த ஃபெய்ன்டிங்’ன்னு நினைச்சேன். ஆனா அடுத்தடுத்த ரெண்டு நாளும் அதேமாதிரி மயங்கினதும் பயம் வந்து ஹாஸ்பிடல் போய் பார்த்தப்போ எதனாலயோ குழந்தையோட லிவர் ஃபங்க்ஷன் பாதிக்கப்பட்டிருக்குதுன்னு சொன்னாங்க.
இனிஷியல் ஸ்டேஜ் தான்! பயப்பட ஒண்ணுமில்ல. மெடிசின்ஸ்லயே க்யூர் பண்ணிடலாம்ன்னு சொன்னாங்க. நான் அதுக்கு மெடிசின் கொடுத்துட்டு இருக்கற அதே நேரத்துல ரேவதியும் அவனுங்க பேச்சைக் கேட்டு, விடாம அவனுங்க தந்த மருந்தையும் கொடுத்திருக்கா!”
“ப்ச்!”
“ம்ம்! அடுத்த வாரத்துலேயே என் அம்முவுக்கு பேச்சு மூச்சில்லாம போச்சு.” என்றவனின் பார்வை தரையை வெறித்தது.
சற்றுநேரம் பொறுத்திருந்த அம்ருதா, “சர்…” என்றழைத்து அவனை நடப்பிற்கு கொண்டு வர,
கலங்கிய கண்களைச் சிமிட்டி ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தான். “மறுபடியும் ஹாஸ்பிடல்! நான் என் பொண்ணை சரியா கவனிக்கலன்னு திட்டினாங்க. இனியொரு முறை குழந்தை மயங்கினா காப்பாத்த முடியாதுன்னு பயமுறுத்தினாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நல்லா இருந்த குழந்தை திடீர்னு எப்டி இவ்ளோ சிக் ஆனா’ன்னு புரியல. டயக்னோஸ் பண்றவங்களே குழம்பினாங்க. ஏன்னா அம்மு ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கும் போது மறுநாள் காலைல எந்த காம்ப்ளிகேஷனும் இல்லாம ஆக்டிவ்வா இருந்தா! அப்போ அம்முவைப் பார்க்க ரேவ்ஸ்… ம்க்கும்… அவ ஹாஸ்பிடல் வந்தா!”
இதற்கு முன்பு அஸ்வத் குழந்தையை மருத்துவமனை அழைத்து வந்தபோது அங்கே தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்கவில்லை. பயப்படும்படி ஏதுமில்லை என்று பொதுவான மருத்துவம் பார்த்து அனுப்பியிருந்தார்கள். அதனால் ரேவதி இதுவரை அஸ்வத்துடன் மருத்துவமனை வர வேண்டிய சூழல் ஏற்படவில்லை. ஆனால் இப்போது அங்கே தங்கியிருக்கும் சூழலில், தான் மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்க்கவில்லை என்றால் அஸ்வத்திற்கு தன் தாய்ப்பாசத்தின் மேல் சந்தேகம் வரக்கூடும்; இத்தனை நாட்கள் போட்ட வேடம் வெளுத்துப் போகும் என்றெண்ணி அன்று ரேவதி வந்திருக்க, அப்போதுதான் அஸ்வத்திற்கு அவள்மேல் சந்தேகம் துளிர்த்தது.
ரேவதியைக் கண்டதும், “ம்மா, டாடி என்னை வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டாங்க. இங்கே நம்ம அங்கிள் இல்லம்மா. வேற அங்கிள் வந்தாங்க.” என்று சொன்ன குழந்தையைக் கண்ட அஸ்வத்தின் விழிகளில் சம்சயம்!
நொடியில் வெளிறிப் போனது ரேவதியின் முகம்.
அஸ்வத் அவளைத் திரும்பிப் பார்க்க, துரிதகதியில் படபடத்தாள். “அ அது… அன்னிக்கு மினிக்கு (ரேவதியின் குழந்தை) ஃபீவர்ன்னு… அம்முவை ஸ்கூல்ல இருந்து பிக்கப் பண்ணிட்டு அப்டியே ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தோம். அதைச் சொல்றா!”
அப்போதே அஸ்வத், ‘அது எந்த அங்கிள்?’ என்று கேட்கவே நினைத்தான்.
குழந்தையிடமோ அல்லது ரேவதியிடமோ யாரிடம் கேட்டாலும், அது ரேவதியின் மேல் நம்பிக்கையற்று கேட்பது போலாகிவிடும். அத்துடன் அவள் யாரிடம் பழகினாலும் அவனுக்கு அதில் அக்கறையில்லை என்பதால் குழந்தையிடம் அந்தக் கேள்வியை அப்போது கேட்காமல் விடுத்து மாபெரும் தவறிழைத்தான் அஸ்வத்.
ஆனால் அவனின் கூர்மையான பார்வையில் வியர்த்துவிட்டிருந்த ரேவதி, அம்முவிடம் வேறு ஏதும் பேசாமல், அஸ்வத்திற்கு உதவியாகவும் இராமல், "மினிக்கு ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் ஒத்துக்காது." என்ற காரணத்தைச் சொல்லிவிட்டு துரிதகதியில் அங்கிருந்து ஓடிப்போனாள். அதில்தான் அவனுக்கு அவள் மீது முதல்முறையாக சந்தேகம் வந்தது.
“அன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி அம்முவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ வீடு திறந்து கிடந்தது. ஆனா அவ வீட்ல இல்ல. முதல்ல நான் அதைக் கவனிக்கல. ஐ மீன் அவ வீட்ல இல்லன்ற விஷயத்தைப் பெரிசா எடுத்துக்கல. அப்புறம் நைட் ரொம்ப நேரமாகியும் வரலயே; கேட் பூட்டணுமேன்னு தான் கால் பண்ணேன். நானும் அம்முவும் வீட்ல இல்லாததால போரடிக்குதுன்னு அவளோட கசின் வீட்டுக்கு போயிருக்கறதாகவும் காலைல வர்றேன்னும் சொன்னா!”
“அப்பவாவது அந்த கசின் யாரு? அவ வீடு எங்கேன்னு கேட்டிருக்கலாம்ல?” என்று அஸ்வத்தைக் கடிந்துகொண்டாள் அம்ருதா.
“அவ இவ்ளோ பெரிய கல்பிரிட்டா இருப்பான்னு யோசிக்கல. மோர்ஓவர் அப்போ எனக்கு அவ விஷயத்துல பெரிசா அக்கறையோ ஆர்வமோ இல்ல. ஓப்பனா சொல்லணும்னா பாவப்பட்டு வீட்ல இடம் கொடுத்தேனே தவிர, அவளோட பர்சனல் லைஃப்ல அவ எப்டி போனா எனக்கென்னன்ற ஸ்டேஜ்ல தான் இருந்தேன்.”
ரேவதி இவன் காதலை எந்தளவிற்கு கொன்றிருந்தால் இப்படியோர் விட்டேற்றியான மனநிலைக்கு வந்திருப்பானென நினைத்தாள் அம்ருதா. இருப்பினும் அஸ்வத் மேல் சிறு கோபமும் வந்தது.
“வீட்டை வாடகைக்கு விட்டா கூட ஆள் யாரு, எப்டின்னு தினம் தினம் சந்தேகத்தோடேயே பார்த்து, குடும்ப விஷயத்தைத் தோண்டி துருவுற ஆட்கள் மத்தில நீங்க ஏன்தான் இப்டி இருக்கீங்களோ! சரி, அப்புறம் என்னாச்சு?”
சின்னப்பெண் என்று சொன்னாலும் அம்ருவின் புரிதலும் புத்திக்கூர்மையும் அபாரமாக இருப்பதைக் கண்டவன், அவள்முன் தன்னை தத்தியாகவே உணர்ந்தான்.
“ரெண்டு நாள் அம்முக்குட்டி கூடவே இருந்து அவ தேறினதும் மறுபடி ரொட்டீன் வொர்க்’க்கு வந்தாச்சு. ரேவதியும் எப்பவும் போல அம்முவை ஸ்கூல்ல பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னா. என்னவோ எனக்கு அம்முவை அவளோட விடறது மனசுக்கு சரின்னு படல. இதுதான்னு சொல்ல முடியாத ஒரு நெருடல்! ஸோ நானே பார்த்துக்கறேன்னு சொல்ல, மறுபடியும் ஒரு சண்டை! ஆனா இந்த முறை நான் விட்டுக்கொடுக்கல. ‘இந்த குழந்தை வேணாம்னு தான் நீ தூக்கியெறிஞ்சிட்டு போன’ன்னு கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன். அழுதுட்டே ரூம்ல போய் பூட்டிக்கிட்டா!”
அம்ரு கன்னத்தில் கை வைத்து அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“மறுநாள் காலைல வெளியே வந்தவ எதுவுமே நடக்காத மாதிரி அம்முவோட அவ குழந்தையை வச்சு விளையாடிட்டு இருந்தா! மோஸ்ட்லி வீட்ல மெய்ட் இருக்கும்போது அதிகம் பேசிக்க மாட்டோம். அன்னிக்கும் காலைல அந்தம்மா அவங்க வேலையை செஞ்சிட்டு இருந்தாங்க. அதனாலதான் இப்டி சாதாரணமா பிஹேவ் பண்றான்னு நினைச்சிட்டு நான் குளிக்க போயிருந்தேன். அந்த கேப்ல குழந்தைக்கு மறுபடியும் எதையோ கொடுத்திருக்கா!” என்ற அஸ்வத்தின் குரலில் நடுக்கம்.
படக்கென எழுந்தவன் அம்ருவின் காலடியருகே மண்டியிட்டு அமர்ந்து, சிதறிய குரலில் தேம்பினான். “இங்க… இங்கே தான் டாக்டர்… அம்மு… என் அம்மு ஃபிட்ஸ் வந்து துடிச்சா… நான் அப்போதான் அவளை சாப்பிட வச்சு அன்னிக்கு உரிய மெடிசின்ஸ் கொடுத்துட்டு ஹால்ல விளையாட விட்டு போயிருந்தேன். அது வேலை செய்ய ஆரம்பிக்கறதுக்குள்ளே இவ பவர்ஃபுல் டோஸ்ல வேற எதையோ கொடுக்கவும், குழந்தையோட உடம்பு ரெண்டு மருந்தையும் ஏத்துக்கல.”
அழுதான்.
நடுக்கத்துடன் அவன் தோள் தொட்டாள் அம்ருதா.
“இதே இடத்துல தான் டாக்டர் அம்முவுக்கு கை கால் வெட்டிக்கிட்டு துடிச்சது… ஒரு… ஒரு நிமிஷம் செத்த பொணமாகிட்டேன் நானு! என்னால எதையுமே யோசிக்க முடியல. மெய்ட்… அந்தம்மா தான் அவசர அவசரமா அம்முவைத் தூக்கி கார்ல வச்சிட்டு என்னை உலுக்கியெடுத்து ஹாஸ்பிடல் போகணும்னு இழுத்துட்டு போனாங்க.”
அம்ருவின் காலடியில் தரையைத் தடவினான். “என் அம்முக்குட்டி டாக்டர். ஒரேயொரு தடவை திருப்பி தந்தா நான் பத்திரமா பார்த்துக்குவேன் டாக்டர். யார்க்கிட்டேயும் விடாம நானே பத்திரமா பார்த்துக்குவேன். டாடி கிட்ட வர மாட்டாளா? லைஃப் ஃபுல்லா நான் அனாதையாவே இருந்து சாகணுமா? வந்துட சொல்லுங்களேன்…”
அவன் தவிப்பைத் தாங்கமுடியாமல் இவளுக்கும் கண்ணீர் ஜனித்தது. “சர்…”
“அம்மு… டாடி அழறேன்’டா… திரும்ப வந்துடேன்…” குழந்தையைத் துழாவுவது போலான அவனின் செய்கையில் அம்ருவின் உள்ளம் துயரக் கரங்களில் சிறைபட்டது. அஸ்வத் தனியே இருப்பது நல்லதல்ல என்றும் அவளின் மருத்துவ மூளை எடுத்துரைக்க, அவனின் மனத்தெளிவுக்கு தானெப்படி உதவ முடியுமென யோசித்தாள்.
அஸ்வத் இன்னுமே தரையைத் தடவிக் கொண்டிருந்தான்.
To be continued in next post...
Comments
Post a Comment