
அத்தியாயம் 15
அலைபேசி அழைத்து ஓய்ந்ததைக் கூட உணராமல், நேற்று அஸ்வத் பிடித்த தன் வலது கையையே பார்த்தபடி தன்னறையில் படுத்திருந்தாள் அம்ருதா.
அஸ்வத் அந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க அவனின் டிடெக்டிவ் வேந்தனின் உதவியை நாடியிருப்பதாகவும், அவன் ஓசூரில் இருக்கும் அந்தக் கட்டிடம் யாருக்கு சொந்தமானது என்று விரைவில் கண்டுபிடித்து சொல்வான் என்றும் நேற்று சொன்னதை அசைபோட்டபடி இருந்தாள்.
“அம்ரூஊ! அம்முக்குட்டி!!” இவளின் அறைக்கதவைப் பலமாகத் தட்டிவிட்டு மூச்சு வாங்க உள்ளே வந்தார் அம்பிகா.
அரவமும் அசைவும் இடைப்புகுந்ததால் அம்ருதாவின் சிந்தனையில் இருந்து தற்காலிகமாகக் கலைந்தான் அஸ்வத். “என்னம்மா?”
“சும்மா தான் படுத்திருக்கியா? அப்புறம் ஏன் கால் அட்டென்ட் பண்ணல?”
“கூப்பிட்டீங்களா? கவனிக்கலம்மா!” என்றவாறு தலைமாட்டில் இருந்த கைப்பேசியை எடுக்க,
“நான் கூப்பிடல. உங்கண்ணன் தான் கூப்பிட்டிருக்கான். நீ எடுக்கலன்னதும் என்னைக் கேட்டான். நானும் கீழே இருந்து கத்துறேன். லொங்கு லொங்குன்னு மாடியேறி வந்து கதவைத் தட்டறேன். எழுந்து வராம இங்கே கண்ணைத் திறந்து வச்சிக்கிட்டு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா?” என்று எரிந்து விழுந்தார்.
“ஸாரிம்மா! கால் வலிக்குதா?”
“இல்ல ரொம்ப இதமா இருக்குது. வயித்தெரிச்சலைக் கிளப்பாம போய் அவன்கிட்ட பேசு.” என்றவர் முதுகுவலி தரும் அவதியால் அங்கேயே படுத்துக்கொண்டார்.
மீண்டுமொருமுறை, “ஸாரிம்மா!” என்றவள் அம்மாவின் காலை இதமாகப் பிடித்துவிட்டவாறே ஹரிஷை அழைத்தாள்.
“ஃபோன் எடுக்காம என்ன பண்ற அம்மு?”
“சும்மா’ண்ணா… தலைவலியா இருந்தது. அதான் சீக்கிரம் வந்துட்டேன். அம்மா வேற காய்ஞ்சு போன பூரி தந்தாங்களா… அதைச் சாப்பிட்டு அப்டியே மயங்கிட்டேன்.”
அம்ருதா கை வழியே தன் காலுக்கு கடத்தும் இதத்தை அனுபவித்தபடி, “ஆமா, அதான் மொபலை சைலண்ட்ல போட்டுட்டு கண்ணை முழிச்சு வச்சு மயங்கி கிடந்தாடா உன் தலச்சம்பிள்ளை!” என்று நையாண்டி பேசினார் அம்பிகா.
“போம்மா!” என்ற பெண் எழுந்துபோய் மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு அண்ணனிடம் பேச்சைத் தொடர்ந்தாள். “சீக்கிரம் வர்ற’ன்னு அம்மா சொன்னாங்க. எப்போ’ண்ணா வர்ற?”
“……”
“ஹரி?”
“ம்ம்!”
“என்ன யோசிக்கற?”
“என் பொண்ணு என்னை விசாரிக்கலயேன்னு யோசிக்கறேன். அவளை விட்டுட்டு நான் என்னென்ன இடத்தையெல்லாம் சுத்திப் பார்த்தேன், என்னென்ன புது டிஷ் சாப்பிட்டேன்னு கேட்டு என்கிட்ட சண்டை போடலயேன்னு யோசிக்கறேன். அவளுக்காக நான் என்ன வாங்கிட்டு வரணும்னு சொல்லி யூஷூவலா வாங்கற லஞ்சம் கேட்கலயேன்னு யோசிக்கறேன்.”
சில நொடிகள் இவளுக்கு வார்த்தைகள் தடுக்கியது. அஸ்வத்தின் நினைவுகளின் ஆக்ரமிப்பில் அண்ணனிடம் பேசும் வழமையை மறந்துவிட்டாள் போலும். அதனைச் சரிசெய்ய கோபமிழைத்த முகக்கவசம் அணிந்தாள். “ச்ச! ஹனிமூன் போனவன் கிட்ட நான் ஏன் இதெல்லாம் கேட்கப் போறேன்? முதல்ல நீ என்னைப் பச்ச பாப்பாவா நினைக்கறதை நிறுத்து ஹரி.”
“ம்ம், பச்ச பாப்பா இல்லைதான்! எந்த பச்ச பாப்பா காரை ஹாஸ்பிடல்ல நிறுத்திட்டு லீவ் சொல்லிட்டு ஊர் சுத்தப் போகுதாம்?”
திக்கென்றிருந்தது. நெஞ்சம் அடித்துக்கொள்ள உதட்டைக் கடித்தாள். தன் பேரில், தன் நலத்தின் பேரில் உள்ள அக்கறையினாலேயே மருத்துவமனையில் ஊழியர்களிடம் தன்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லியிருக்கிறான். அவளும் அண்ணனுக்கு, அவனின் பாச நேசத்திற்கு, சினம், சீற்றத்திற்கு கட்டுப்பட்டவள் தானே! அதனால் தன் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அவன்மேல் கோபம் கொள்ள விழையவில்லை.
“உன்கிட்ட சொல்லாம போனதுக்கு ஸாரிண்ணா… அது ஒரு ஃப்ரெண்ட்… ப்ச்! நீ வந்ததும் சொல்லலாம்னு இருந்தேன். இன்ஃபாக்ட் உன்னைத்தான் அவருக்கு ரெஃபர் பண்ணனும்னு நினைச்சிருக்கேன்.”
“எதுக்கு?”
“நீ வந்தப்புறம் சொல்றேனே… இப்போ அண்ணி உன்னைத் தேடப் போறாங்க. என்ன பண்றாங்க? அந்த ஊர் பிடிச்சிருக்குதா?”
“……”
“டேய்!”
“இதெல்லாம் நீ முதல்லயே கேட்டிருந்தா நீ நார்மல்ன்னு புரிஞ்சு, நானும் ஒழுங்கா பதில் சொல்லிருப்பேன். பட் ஐ’ம் வெரி ஷ்யோர் நீ சரியில்லை அம்முக்குட்டி!”
அண்ணனின் பாசக் கிடங்கின் ஆழத்தைக் கண்டு மெய் சிலிர்த்து போனாள் அம்ருதா. ஆனாலும் கோபம் போல், “ஆமா, அத்தனை ஆயிரம் தூரத்துல உட்கார்ந்துக்கிட்டு இவனுக்கு ரொம்ப தெரிஞ்சிடுச்சாம்! போடா!” என்றவள் அழைப்பைத் துண்டிக்கப் போக,
“அம்ருதா!!” என்ற அண்ணனின் அதட்டல் குரலில் சுருண்ட மாலையாக அடங்கிப் போனாள்.
“எத்தனை ஆயிரம் தூரத்துல இருந்தாலும், வளர்த்த எனக்கு உன்னை எனக்கு தெரியும். உன்னை அப்டி சும்மா ஊர் சுத்த விட்டுட்டு நான், என் சுகம்னு இருந்துடுவேன்னு நினைச்சியா?”
“அ அண்ணா…”
ஹரி மறுமொழி தரவில்லை.
பெருமூச்சுடன் சொன்னாள் இவள். “அவருக்கு ஃபேமிலின்னு யாரும் இல்லை. ரீசண்டா அவரோட மூணு வயசு குழந்தை தவறிட்டா! அதுல அவர் ரொம்ப அப்செட் ஆகிருக்கார். ஹீ நீட்ஸ் சைக்கிக் கவுன்சிலிங்’ண்ணா!”
“உனக்கெப்டி தெரியும்?”
“அ… அவரா? அது… அவரோட பேபி என்னோட பேஷண்ட் தான்!”
சர்வ நிச்சயமாக தங்கை தன்னிடம் பொய்யுரைக்கிறாள் என்று ஹரிஷிற்கு தெரிந்தது. இவர்கள் பணிபுரியும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறும், அதிலும் அடிக்கடி இவளைச் சந்திக்க நேரிடும் சில குழந்தைகளின் பெற்றோர்களை அம்ருதாவிற்கு தெரியும்தான்! அந்தக் குழந்தைகளின் நோய்களைப் பற்றி பேசும்போது சில சமயம் அவர்களைப் பற்றியும் ஏதாவது சொல்லுவாள்.
ஆனால் நட்பு என்றளவில் தனியே சந்திக்கும் அளவிற்கு யாரிடமும் பரிச்சயமில்லை என்று ஹரிஷிற்கு தெரியும். இருந்தும் இப்போது மேலும் கேள்விகள் கேட்டு அவளின் பொய்களை வளர்க்க விரும்பாமல் தன் அமைதியைத் தொடர்ந்தான்.
“அண்ணா ப்ளீஸ்… ஈவ்னிங் மீட் பண்றேன்னு சொல்லிருக்கேன். போயிட்டு வரட்டுமா?”
“எதுக்கு? என்கிட்ட சொல்லிட்ட தானே? நான் வந்து பார்த்துக்கறேன். உனக்கு தலைவலி சரியாகிடுச்சுன்னா நீ ஹாஸ்பிடல் கிளம்பு!”
“இல்ல… அவர்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.”
“நேத்தும் லீவு; இன்னிக்கும் லீவு! எல்லாம் அவனுக்காக தானா?"
"இல்ல, இன்னிக்கு நிஜமாவே என்னால ஹாஸ்பிடல்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியல.”
“அம்முக்குட்டி!!
“ப்ளீஸ் ஹரி… சீக்கிரம் வந்துடுவேன்.”
ஹரிஷ் சற்றுநேரம் வாளாவிருந்தான். பந்தை நீரில் அமிழ்த்தினால் முழுமூச்சாக உதறிக்கொண்டு மேலேறி வருவதுடன், தன் கை நழுவிச் செல்லும் அபாயமும் இருக்கிறதென அந்த மனநல மருத்துவனுக்கு புரிந்தே இருந்தது. அதனால் அம்ருதாவை இழுத்துப் பிடிக்க நினைக்கவில்லை. “ஓகே, எங்கே இருக்கன்னு எனக்கு லொகேஷன் அப்டேட் பண்ணிட்டே இருக்கணும்.”
“பண்ணித் தொலைக்கறேன். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு என்கிட்ட வாங்குவ பாரு!”
*******
தன் வீட்டினருகே இருக்கும் ஓர் உயர்தர தேநீர் விடுதிக்குதான் அஸ்வத்தை வர சொல்லியிருந்தாள் அம்ருதா. மாலை நேர தேநீரின் அனுகிரகம் பெறவே மக்கள் அங்கே மையமிட்டிருந்தனர்.
அவன் இன்னும் வந்திருக்கவில்லை. வெளியிலிருந்து வந்தால் தெரியும் விதமாக முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கையொன்றில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்த வேளையில்,
அன்றைய பணியினை இவளுக்காகவே விரைவில் முடித்துக்கொண்டு வந்த அஸ்வத், “ஸாரி டாக்டர்! டிராஃபிக்!” என்றபடி எதிர் இருக்கையை ஆக்ரமித்தான்.
“பரவாயில்ல சர். என்ன சாப்பிடறீங்க?”
“கோல்ட் காஃபி?”
அதையே இருவருக்கும் ஆர்டர் செய்தாள்.
“எதுக்கு டாக்டர் ரேவ்ஸ் மொ…”
அம்ருவின் முறைப்பில் தொண்டையைச் செருமியவன், “அவ மொபைல் ஏன் கேட்டீங்க?” என்றவாறு ரேவதியின் அலைபேசியை எடுத்து மேசையில் வைத்தான்.
“அன்னிக்கு நீங்க டிராக் பண்ணி போன நம்பர் யாரோடதுன்னு கண்டுபிடிச்சீங்களா?”
“இந்த நம்பர்தான் அது! அவளுக்கு ஃபேக் அட்ரஸ்ல வாங்கி கொடுத்திருக்கானுங்க போல!”
“நீங்க டிடெக்டிவ்வோட சேர்ந்து டிராக் பண்ணும்போது அவளோட பழைய மொபைலை தான் வீட்டுல விட்டுட்டு போயிருந்தா’ன்னு சொன்னீங்க இல்லயா? அப்போ அவங்களோட கான்வோ இருக்க இந்த மொபைல் உங்களுக்கு எப்டி கிடைச்சது?”
“அன்னிக்கு அவ அம்முவை ஸ்கூல்ல இருந்து பிக்கப் பண்ணினான்னு சொன்னேனே… இது அந்த ஸ்கூல் பேக்ல தான் இருந்தது. அப்புறமா எடுத்துக்கலாம்னு வச்சாளோ இல்ல அவசரத்துல வச்சாளோ தெரியல! ஆனா எனக்காக அவ விட்டுட்டு போன க்ளூ இது மட்டும்தான்!”
அவன் சொன்னதை செவிமடுத்தவாறு அதில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் அம்ருதா.
“எத்தனை நாளா ரெண்டு மொபைல் யூஸ் பண்ணா’ன்னு தெரியல டாக்டர்.”
“அன்னிக்கு செத்தவன் யாருன்னு தெரியுமா?”
“தெரியல. கண்டிப்பா அந்த கேங்ல இருக்க எவனோவா தான் இருக்கணும்! அவ்ளோ திமிரா நின்னான். அவளையும் மிரட்டுற மாதிரிதான் பார்த்தான். மே பீ அந்த கேங் லீடரா கூட இருக்கலாம்.”
திரையில் இருந்து நிமிராமல் சொன்னாள் அம்ரு. “வீட்டுக்குள்ளே ஒருத்தியை விட்டுட்டு அவளைப் பத்தின கவலை இல்லாம ஏனோதானோன்னு இருந்திருக்கீங்க அஸ்வத். உங்களை என்னப் பண்றது?”
அவளின் அதிருப்தியில் விழித்தான் இவன். “ப்ச்! அவ மேல கேர் எடுத்துக்கிட்டா, எங்கே நான் அவகிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கறதா நினைப்பாளோன்னு தோணுச்சு. மோர்ஓவர் ஒரு ஸ்டேஜ்ல அவளுக்கு என்னோட சேர்ந்து வாழ விருப்பம்ன்னு தெரிஞ்சப்போ, அதுக்கு இடங்கொடுக்க வேணாம்னு நான் அப்டியே ஒதுங்க ஆரம்பிச்சிட்டேன் டாக்டர். என்ன தேடறீங்க?”
“அவங்க கான்வோ’ல ஒரு விஷயம்… இதுதான்! காட் இட்!” என்றவள் நிமிர்ந்தமர்ந்து, அன்று வாசித்த உரையாடல்களையே மீண்டும் வாசித்தாள்.
அஸ்வத்தும் முன்னால் வந்து பார்த்தான்.
‘Deii! I’m talking with my darling Rev! U two go out! Revathi nee sollu. Indha weekend en farm house variya?’
‘Hey Coke! Baby consent ku create panna grp a ivan edhuku use pandran paarudi🥱’
‘Hmm… indha arivula konjam research layum kaatina nalla irukum😏’
‘I would like to remind you both dudes… I have a higher cutoff marks than both of you😎’
‘Coke, vaadi ini avan perumai adikaradha parka enaku thembilla🤕’
வாசித்துவிட்டு நிமிர்ந்த அம்ருதா எதையோ கண்டுகொண்ட பாவனையில் அஸ்வத்தைத் தீர்க்கமாகப் பார்த்தாள். “கோக்!”
“கோக்? ஏதோ பெட் நேம் மாதிரி இருக்குது.”
“எஸ்! இந்த இடத்தைத் தவிர வேற எங்கேயும் யார் பேரும் குறிப்பிடப்படல. ரொம்ப கவனமா இருந்தவங்க இந்த இடத்துல மறந்தோ அல்லது எப்டியோ பேரை மென்ஷன் பண்ணிருக்காங்க சர். அந்த தரு அண்ட் இந்த கோக்! இது மட்டும்தான் இப்போ நமக்கு இருக்க லீட்!”
அஸ்வத் அவளை நம்பிக்கையற்று பார்த்திருக்க, மேலும் சொன்னாள் அவள். “ஓகே, எனக்கு நாளைக்கு வரைக்கும் டைம் கொடுங்க. அந்த க்ரூப்’அ நான் கண்டுபிடிச்சு சொல்றேன்.”
“சீரியஸ்லீ?”
“காஃபி எடுத்துக்கோங்க சர்!”
“எப்டி டாக்டர்? உங்களுக்கு அந்த கோக் யாருன்னு தெரியுமா?”
“ஐ திங்க் ஸோ…” என்றவள் உறிஞ்சுக்குழலால் அந்த குளிர்ந்த குளம்பியை உறிஞ்சியெடுத்து கன்னக்குழி வரைய,
பதிலுக்காக அவளையே ஆவலாகப் பார்த்திருந்த அஸ்வத் பொறுமையற்று, அவள் உதட்டிலிருந்த உறிஞ்சுக்குழலோடு அவளின் கோப்பையையும் பிடுங்கி நகர்த்தி வைத்துவிட்டு கேட்டான். “யாரு?”
அவனின் அதிகப்படியான செயலில் கோபம் வருவதற்கு பதிலாக, கன்னங்கள் குறுகுறுத்ததில் உள்ளுக்குள் கலவரமாக உணர்ந்தாள் அம்ருதா. “நான் கன்ஃபர்ம் பண்ணிட்டு சொல்றேனே…”
“பரவாயில்ல சொல்லுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே கன்ஃபர்ம் பண்ணுவோம்.”
“காலேஜ்ல என் கூட படிச்ச ஒருத்தன் பேரு தாரகேஷ்.”
தன்னையுமறியாமல் சட்டென்று அவளின் புறங்கையை அழுத்தியிருந்தான் அஸ்வத். “அவன்தான் தரு’வா?”
“டோண்ட் கெட் ஹைப்பர் அஸ்வத்! இதுக்குத் தான் நானே கன்ஃபர்ம் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னேன்.”
“ஓகே! ஓகே!” என்று நல்ல பிள்ளையாக இரு கைகளையும் கட்டிக்கொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்தான். அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை என்று அவனின் உடல்மொழியே காட்டிக் கொடுத்தது.
“ஹவுஸ் சர்ஜன் பீரியட்ல ஒரே பேட்ச்ன்றதால சில முறை பேசிருக்கேன். மத்தபடி எனக்கு அவனைப் பத்தி தெரியாது. இது அவனாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஐ’ம் நாட் ஷ்யோர். பட் ரெண்டு மூணு வாட்டி வேற காலேஜ் பொண்ணோட இவனைப் பார்த்திருக்கேன். அவளை இவன் ‘கோக்’ன்னு கூப்பிட்ட ஞாபகம்!”
“டாக்டர் நிஜமாவா? முதல்ல அந்த தாரகேஷ் எங்கே இருக்கான்னு கண்டுபிடிக்கலாம் வாங்க!” என்றவாறு எழுந்து நிற்க,
“அஸ்வத்!!” என்று கண்டிப்புடன் அழைத்து அவனை நிறுத்தினாள் இவள்.
அப்போது இடைச்செருகலாக, “ஹே ரோலர் பொட்டெட்டோ! கல்யாணம் பண்ணிக்கலாமாடீ?” என்று அம்ருதாவின் தோளை இடித்துக்கொண்டு வந்தமர்ந்தான் ஒரு இளைஞன்.
அஸ்வத்திற்கு அவனை அடையாளம் தெரிந்தது. அன்று ஹரிஷின் திருமணத்தின் போது அம்ருவின் அம்மாவிடம் இவளைத் திருமணம் செய்து தரும்படி கேட்டுக் கொண்டிருந்தவன்!
“டாம் க்ரூஸ்! நீ எங்கேடா இங்கே?”
“உன்னைப் பார்க்க தான் வந்தேன்.” என்றவன் அத்தனைப் பற்களையும் காட்ட,
அங்கே கவிழ்த்து வைத்திருந்த டம்ளர் ஒன்றை எடுத்து அவன் வாய்க்கு நேராகப் பிடித்தாள் அம்ருதா.
அவள் கையைத் தட்டிவிட்டவன், “நக்கலாடீ? நீ இங்கே என்ன பண்ற? ஹரி அத்தான் ஊர்ல இல்லன்னதும் ஊர் சுத்த கிளம்பிட்டியா?” என்றிட,
“ஆமா, ரெண்டு கோல்டு காஃபி! பில் பே பண்ணிடு.” என்றவள் கைப்பையை எடுக்க,
“அடிங்!” என அடிக்க எழுந்தான் அவன்.
“கட்டிக்க போறவளுக்காக இது கூட செய்யமாட்டியா அத்தான்?”
“ச்ச! சரியான பஞ்சத்துல அடிப்பட்ட கஞ்ச பிசினாரி குடும்பம்டா!” என்று புலம்பியபடி, மேசையில் இருந்த பில் அட்டையை எடுத்து க்யூஆர் கோட் (QR code) மூலம் அலைபேசி வாயிலாக ‘ஜிபே’ செய்ய முயல,
“தட்’ஸ் ஃபைன்! நான் பே பண்றேன் டாக்டர்!” என்று அட்டையைத் தன் பக்கம் திருப்பி பணம் செலுத்தினான், இத்தனை நேரம் அத்தை மகன், மாமன் மகளின் உரையாடலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வத்.
“எங்க அம்ருவோட பேஷண்ட்டா?” என்று அஸ்வத்தைக் கண்டு நட்புடன் சிரித்தவன் விடைபெறும் விதமாய் அம்ருதாவின் தோளணைத்தான். “பை அம்ரு! ஒரு என்கொய்ரிக்காக வந்தேன். பார்க்கலாம்.”
“வீட்டுக்கு வா அத்தான். உன்னைப் பார்த்தேன்னு சொன்னா அம்மா கேட்பாங்க.”
“இன்னொரு நாள் வர்றேன்னு அத்தை கிட்ட சொல்லு. எங்க சார் வெளியே வெய்ட் பண்றார்.” என்றவன் அம்ருவின் கன்னத்தைத் தட்டிவிட்டு, “வர்றேன் சர்.” என அஸ்வத்திடமும் விடைபெற்றுக் கொண்டு ஓடினான்.
அம்ருதா பூத்த புன்னகையுடன், “என் கஸின்! இன்ட்ரோ கொடுக்க முந்தி ஓடிட்டான்.” என்றிட,
‘ஏற்கனவே அவனைத் தெரியும்.’ என்று சொல்லாமல் தெரியாதது போல் தலையாட்டியவன் அவளுடன் நடந்து வெளியே வந்தான். “அந்த தருவை எப்டி கண்டுபிடிக்கறது டாக்டர்?”
“என் ஃப்ரெண்ட் கிட்ட விசாரிக்க சொல்லிருக்கேன். இப்போ அவளைப் பார்க்க தான் போறேன். நீங்க…”
அவளின் தயக்கம் புரிந்தவன், “சேர்ந்தே போகலாம். நீங்க மட்டும் போய் பேசிட்டு வாங்க. நான் கார்ல வெய்ட் பண்றேன்.” என்றிட,
ஆமோதித்தவளுடைய கண்களின் பளபளப்பை ரசிக்க முற்படாமல், அது ஏன் என்ற கேள்வியைச் சிந்தனைக்கு அனுப்பி விடை கண்டறிய முயன்றான்.
அம்ருதாவின் வீடு பக்கம்தான் என்பதால் அருகேயிருந்த கஃபே’க்கு நடந்துதான் வந்திருந்தாள். இப்போது அஸ்வத்தின் இயக்கத்தில் (driving), அவளின் மனதுக்கு பிரியமான ஸ்கார்பியோவில் பயணம் என்றதும் உள்ளம் சிறுபிள்ளையாய்க் குதூகலித்தது.
அஸ்வத் தன்னை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணராமல், அனிச்சையாக ஸ்கார்பியோவை வருடியபடி உள்ளே ஏறி அமர்ந்தாள் அம்ருதா.
The Scorpio's chase begins 🚗...
Very intresting!
ReplyDeleteThank u 🫶✨
Delete