ஸ்கார்பியோ காதல்🚗💌 - 6.1

 

ஸ்கார்பியோ காதல்
Amru's secret and Scorpio guy's flashback 

அத்தியாயம் 6


அண்ணனைச் சமாளித்துவிட்டோம் என்றெண்ணிக் கொண்டு விழி மூடியிருந்த அம்ருதாவின் சிந்தை முழுவதும் ஸ்கார்பியோகாரனும் அவனின் குழந்தையும் மட்டுமே நிரம்பியிருந்தனர்.


அப்போது தோன்றாத கேள்வியெல்லாம் இப்போது தோன்றி மூளையைக் குடைந்தெடுத்தது.


குழந்தையை இந்த நிலைமையில் வைத்துக்கொண்டு ஏன் இவன் பயண வழியிலெல்லாம் வாகனத்தை நிறுத்தி நிறுத்தி வருகிறான்? இந்த மழை நேரத்திலும் கூட அந்த அத்துவான காட்டை சமீபித்து நிற்கின்றானே! என்னதான் குழந்தை என்று சொன்னாலும் இப்போது அவள்… அது ஓர் உயிரற்ற உடலல்லவா? பறவைகள், விலங்குகள் நடமாடும் இடத்தில் அப்படி வைத்திருக்கலாமா?


குழந்தை மேல் மிகுந்த பாசம் போலும். அவளுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்துகிறான் என்று புரிந்துகொள்ள முடிந்தது இவளுக்கு. ஆனாலும் இது சரியில்லையே! தான் இன்னும் அழுத்திச் சொல்லியிருக்க வேண்டுமோ?


பத்திரமாக ஊர் போய் சேருவானா? இல்லை, இந்த அசாதாரண மனநிலையில், துக்க உணர்வில் ஏதேனும் செய்துகொள்வானோ?!


“அய்யோ!” உடல் தூக்கிப் போட, பதறி விழித்தாள் அம்ருதா.


“என்னடா அம்மு?” என்ற அண்ணனின் குரலில் நிகழ்கணத்திற்கு வந்தவள், தான் இப்போது மகிழுந்தில் அண்ணன், அண்ணியுடன் சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.


“ஹான்? க கனவுண்ணா…” என்றுவிட்டு சால்வையை மேலும் இழுத்து முகம் மறைத்து மூடிக்கொண்டு, மீண்டும் ஸ்கார்பியோகாரனைச் சிந்தனையில் துரத்தினாள்.


அம்ருதாவிற்கு ஆண்களிடம் பிடிக்காதது பரட்டை தலையும் தாடியும்! இதனாலேயே பல நடிகர்களை இவளுக்கு பிடிப்பதில்லை. 


‘அவன் மூஞ்சியைப் பார்த்தாலே கசகசன்னு இருக்குது. ஒரு மேன்லி லுக் வேணாம்? இவனை எப்டி இந்த ஹீரோயினுக்கு பிடிக்குது?’ என்று நினைத்து முகத்தைச் சுளிப்பாள், இந்த கொரியன் நாடக நாயகர்களின் காதலி!


‘நமக்கெல்லாம் நம்ம ஒப்பாஸ் தான்ப்பா சைட்டடிக்க சரி!’ என்று சொல்லிக்கொண்டு திரிபவள், இன்று அந்த ஸ்கார்பியோகாரனின் பரட்டை தலையையும் தாடியையும் கூரிய விழிகளையும் அடிக்கொரு முறை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறாள்.


‘எத்தனை கண்ணியமானவன் இவன்!’ என்று அவன் தன்னிடம் அத்துமீறாமல் அவ்விடத்தை விட்டு போக சொன்னதையும், பத்திரமாக அண்ணன் அருகே அழைத்து வந்ததையும் நினைத்துப் பார்த்தாள். 


‘உன் மூஞ்சி! அவன் உன்னை வர்றியான்னு கேட்கல?’ என்று மனசாட்சி காறித் துப்பி கேட்டது.


‘அது… நான் நகராம நின்னுட்டு இருந்ததால, அங்கே இருந்து போக வைக்கறதுக்காக அப்டி கேட்டிருப்பான். மத்தபடி அவன் கண்ணுல அந்த மாதிரி எண்ணம் எதுவுமில்லை. நான் டாக்டர்ன்னு சொன்னதும் எவ்ளோ மரியாதையா நடந்துக்கிட்டான்! அந்த வேலையை அவன் மதிக்கறதுனால தானே அப்டி மரியாதை தந்தான்?’


‘இவ்ளோ கொடி பிடிக்க தேவையில்லை. அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.’


‘ம்ம், கல்யாணம் ஆகிடுச்சு. இல்லாம குழந்தை எப்டி வரும்? ப்ச்! கொடுத்து வச்சவ அவன் வைஃப்! கால் பண்றேன்னு சொல்லிருக்கான்ல? அவளை ஒரு முறையாவது பார்த்துடணும்.’


‘இடியட்! தப்பு தப்பா யோசிக்கற…’


‘ஹ்ம்ம்… தப்பு…’ யோசித்துக்கொண்டே தூங்கிப் போனாள் அம்ருதா.


ஊர் போய் சேர்ந்த பின்னர் ஹரிஷ் தன் கல்யாண வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தாலும், தங்கையையும் கண்காணித்துக் கொண்டே தான் இருந்தான். 


அவளின் இயல்பற்ற நடவடிக்கைகளில் இரு நாட்கள் கழித்து அவளை அழைத்துக் கேட்டான். “அண்ணன் கிட்ட ஏதாவது சொல்லணுமாடா?”


“ஆமாண்ணா, நாளன்னிக்கு பெடிக்யூர்க்கு புக் பண்ணிருக்கேன். டைம் ஃப்ரீ பண்ணிக்கிட்டு என்னையும் அண்ணியையும் நீதான் கூட்டிட்டு போகணும்.” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு சென்றவளைச் சத்தியமாக நம்பவில்லை அவன்.


அவனுக்கு தங்கை மீது சந்தேகம் வலுக்க முக்கிய காரணமே அவள் முந்தாநாள் காலையில் மகிழுந்தில் இருந்து இறங்கியதிலிருந்தே இவனிடம் அகப்படாமல் போக்குக் காட்டிக் கொண்டிருப்பதால்தான்! காலையில் இருவருமாகப் பணிக்கு செல்லும்போது அலைபேசியில் நண்பர்கள் யாருடனாவது தீவிரமாகப் பேசுவதைப் போல் பாசாங்கு செய்தாள். வீட்டில் இவன் இருந்தால், அவள் அம்மா அல்லது அப்பா யாருடனாவது இருப்பது போல் பார்த்துக் கொண்டாள். 


அதையும் மீறி அவன் கண்காணித்ததில் சுற்றம் மறந்து எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறாள். அடிக்கடி அலைபேசியை எடுத்து பார்த்துக் கொள்கிறாள்.


இவனுக்கு இன்னதென்று இனங்காண முடியவில்லை; சொல்லத் தெரியவில்லை. ஆனால் தன் தங்கை…‌ அல்ல, தன் குழந்தையிடம் ஏதோ மாறுதல் தென்படுகிறது என்றளவில் புரிந்தது. 


மருத்துவமனையில் மதியம் இருவருக்கும் நேரம் ஒத்துழைத்தால் மட்டுமே இருவரும் ஒன்றாக உணவருந்துவது வழக்கம். அதுபோல் ஒருநாள் மதிய நேரத்தில் அவளுக்கு சொல்லாமல் உணவை எடுத்துக்கொண்டு அவளைக் காணச் சென்றான்.


மருத்துவமனையின் கிழக்குப் பிரிவில் குழந்தைகள் நல பிரிவும் குழந்தைகளுக்கான ஐசியூவும் இருக்க, அதன் முதல் தளத்தில் உள்நோயாளிகளின் பிரிவு இருந்தது. கீழே அம்ரு எங்கே என்று கேட்டு, அவள் உள்நோயாளிகள் பிரிவில் இருப்பது தெரிந்து முதல் தளத்திற்கு படியேறினான். அறையிலிருந்து வெளியே வந்த செவிலியப் பெண் ஒருவர், காரிடாரில் ஹரிஷ் நிற்பது கண்டு உள்ளே போய் அம்ருவிடம் சொன்னாள்.


சின்னச் சின்னப் படுக்கைகளில் தத்தம் அம்மாக்களை அருகே வைத்துக்கொண்டு படுத்திருந்த குழந்தைகளின் கண்களில், மண்ணில் இறங்கி விளையாட முடியாத சோகம் அப்பிக்கிடக்க, அவர்களின் நடுவே வெள்ளைக் கோட்டுடன் நின்றிருந்த அம்ருதா நோய்விவரக் குறிப்புகளைச் சரிபார்த்து அடுக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.


எதிர்ப்பட்ட செவிலியர், “உங்களைப் பார்க்க ஹரிஷ் சர் வந்திருக்கார்.” என்று தகவல் சொல்லி கைக் காட்டிவிட்டு நகர, இவள் அண்ணனைக் கண்டு அவனருகே வந்தாள். 


எங்கே இருக்கிறாயென அழைத்துக் கேட்காமல் அவனாகவே தன்னைத் தேடிக்கொண்டு வந்திருப்பதில், அம்ருவின் மனம் தன்னாலேயே விழிப்பூட்டல் முறையை (alert system - ON)‘ ஏற்றி வைத்துக்கொண்டது. ‘கண்ணாலேயே ஹிப்னாடிஸைஸ் பண்ணுவான் இந்த பைத்தியக்கார டாக்டர்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!’


அவள் கண்களில் இத்தனை எச்சரிக்கையை ஏற்றிக்கொள்வதே அவள் அண்ணனின் சந்தேகம் வலுக்கப் போதுமானதாக இருந்தது. “டயர்டா தெரியற அம்மு.”


கையிலிருந்த குறிப்புத்தாள்களில் பார்வை பதித்தாள். “ஹ்ம்ம்! ஒரு குட்டிப் பையனுக்கு கேன்சர். ஆபரேஷன் முடிஞ்சு ஐசியூல இருந்து நேத்துதான் இங்கே ஷிஃப்ட் பண்ணாங்க. பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருந்தது.”


தன்னை திசைதிருப்பும் தங்கையைக் கண்டு உள்ளுக்குள் நகைத்தவன் அவள் போக்கிலேயே பேச நினைத்து, “எத்தனை வாட்டி சொல்றது? பேஷண்ட் கிட்ட எமோஷனலி அட்டாச்ட் ஆகாதேடா!” என்றவாறு நடக்க ஆரம்பிக்க,


அவனோடு நடந்தபடி பேசினாள் அம்ருதா. “பேஷண்ட்ன்னா பேப்பர்ல டேட்டா மட்டுமில்லயே ஹரி? கிளினிக்கலி ட்ரீட்மென்ட் ப்ரோட்டாகால், டோஸேஜ்ன்னு ஃபாலோ பண்ணாலும் அந்த குழந்தை கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு கூலா இருக்க முடியல. அவங்கம்மா வேற அழுதது பார்த்து இன்னும் ரொம்ப கஷ்டமா…”


இடையிட்ட ஹரிஷ் மருத்துவரின் குரலில் சொன்னான். “அம்முக்குட்டி, நீ ஒரு டாக்டர்டா! இதுமாதிரி நீ இன்னும் எத்தனைப் பார்க்கணும்? ஹவுஸ் சர்ஜன் பீரியட்லயே நீ இப்டித்தான் இருந்த! அனுபவம் வந்தா தானா மாறிடுவான்னு நினைச்சேன். இப்போ எம்டி’லயும் அதேமாதிரி இம்மெச்சூர்டா பிஹேவ் பண்ணா எப்டி?”


தன்னை அவன் முதிர்ச்சியற்றவள் என்றதில் கோபம் பெருகிட, “போடா பைத்தியக்கார டாக்டர்! எந்நேரமும் டாக்டர் டோன்லயே பேசிக்கிட்டு!” என ‘உர்’ முகமாக நடந்தாள்.


“அஃப்கோர்ஸ், பைத்தியக்கார டாக்டர்! ஏன்னா நான் மைண்ட், எமோஷன்ஸை ஹேண்டில் பண்றவன். உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா நீ கூட டிரைப் பண்ணலாம். உன் பேஷண்ட்ஸ்க்கு மெடிசின்ஸ் மட்டுமில்ல, உன் வேர்ட்ஸ் கூட ஒரு தெரபிதான்.”


“ஹ்ம்ம்… ஆனா ரிசர்ச்ல எமோஷன்ஸ்க்கு ப்ளேஸ் கிடையாதேண்ணா. ஜிசிபி (GCP - Good Clinical Practice) கைட்லைன்ஸ்க்கு ஹ்யூமன் டச்’ஐ எப்டி எழுதுவேன்?”


“ஹாஹா… அதுதான் டிஃபரன்ஸ் பிட்வீன் யோர் சர்ஜரி அண்ட் மை சைக்யாட்ரி! நீங்க பாடியை ட்ரீட் பண்ணுறீங்க. நான் மைண்ட்’அ ட்ரீட் பண்ணுறேன். மனுஷனுக்கு ரெண்டுமே ரொம்ப முக்கியம்.”


‘நீ மைண்ட்’அ ட்ரீட் மட்டுமா பண்ற? ரீடிங் வேற பண்ற!’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று தன் மதிய உணவை எடுத்து வந்தாள்.


தங்கை சட்டென்று முகத்தைத் திருப்பி மனத்தை மறைத்ததை ஹரிஷ் கவனித்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளை ஆராய்ச்சியாகப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டவன், “ஸ்வேதா ஈவ்னிங் ஷாப்பிங் போகலாமான்னு கேட்டா… உனக்கு டைம் செட்டாகுமா?” என்றிட,


“அண்ணா, எத்தனை வாட்டி சொல்றது? அண்ணி உன் கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைக்கறாங்க. நீ கங்காரு குட்டி மாதிரி என்னையும் தூக்கிட்டே சுத்தணும்னு நினைக்காதே!” என்று அடிக்குரலில் கண்டித்தாள் இவள்.


“மாதிரி இல்ல! நீ எனக்கு கங்காரு குட்டியே தான்! ஸ்வேதாவுக்கே இது தெரியுமே!”


“காட்! எனக்கெல்லாம் இப்டியொரு நாத்தனார்காரி இருந்தான்னா அவளுக்கு ஒரு சூனியம் வச்சிட்டு, இவனுக்கு நாலு அறை விட்டு உனக்கெல்லாம் என்னத்துக்குடா பொண்டாட்டின்னு மூக்கை உடைச்சிடுவேன் தெரியுமா?” என்றவளின் பாவனையில் சிரித்தாலும், தன் ஆராய்ச்சி பார்வையை விடவில்லை இவன்.


இதனால்… இந்தப் பார்வையால் தான் அம்ரு இவனிடமிருந்து தப்பித்து ஒளிந்து கொள்ள நினைக்கிறாள். தன் சிறு அசைவையும் அண்ணன் கண்டுகொள்வான் என்று தெரியும். அத்துடன் இவளாலும் அவனிடம் எதையும் மறைத்து வைக்க முடியாது. உளறிவிடுவோமோ என்ற பயம்!


அண்ணனின் ஆராய்ச்சி பார்வையைச் சந்திக்கும் போதெல்லாம், ‘என் விஷயம் வெளியே போகக்கூடாது டாக்டர்!’ என்ற ஸ்கார்பியோகாரன் எச்சரிக்கையே நினைவிற்கு வந்து தொலைத்தது.


“நான் உனக்கு நாத்தனார் இல்லாத மாப்பிள்ளையைப் பார்க்கறேன், போதுமா? ஆனா என்னை மாற சொல்லாதே அம்மு! அது என்னால முடியாதுன்னு உனக்கும் தெரியும். நீயும் நான் இல்லாம எதையும் தனியா செய்யமாட்ட’ன்னு எனக்கும் தெரியும்!” என்று பார்வையை மாற்றாமல் சொல்ல,


அவனின் கடைசி வாக்கியத்தில் தன் தடுமாற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினாள் அம்ருதா. “அண்ணா…”


“சாப்பிடுடா! ஈவ்னிங் டைம் பார்த்துட்டு சொல்லு.”


அண்ணனின் மென்மையான அணுகலில் பலமான குற்றவுணர்விற்கு ஆளானாள் அம்ருதா.


                        Next article 🫶

Comments

Post a Comment

Popular Post 🌟

கருவறை கீதம் (தொகுப்பு)

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ (தொகுப்பு)