அத்தியாயம் 17 மூன்று நாட்கள் கடந்த பின்னர், அன்று ஹரிஷ் ஊர் திரும்ப இருந்தான். தானே தனியாக அண்ணனை வரவேற்க வேண்டும் என்று அப்பாவின் காலில் விழுந்து கெஞ்சி, சில பல நாடகத்தனங்களை அரங்கேற்றி, மகிழுந்தின் சாவியைக் கைப்பற்றியிருந்தாள் அம்ருதா. விடியா பொழுது என்பதால்தான் அவளிடம் மகிழுந்தைத் தர மறுத்தார் அம்ருவின் அப்பா நடராஜன். “வரும்போது காரை அவன்கிட்ட கொடுத்திடணும்.” என்ற நிபந்தனையுடன் தான் திறப்பு அவளிடம் தரப்பட்டது. இரவில் பாதி நேரம் அஸ்வத்தின் குழந்தையை நினைத்து தூக்கமில்லாமல் இருந்தவள், மீத நேரமும் எங்கே தூங்கிவிட போகிறோமோ என்று முகத்தைக் கழுவிவிட்டு அமர்ந்திருந்தாள். அதுவரை தூங்காமல் கவனத்துடன் மகிழுந்தைச் செலுத்தி வந்திருந்தவளால் அதற்கு மேல் முடியவில்லை. இதோ! விமானநிலையத்தில் அண்ணனுக்காகக் காத்திருப்பு பகுதியில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருக்கிறாள். விமானம் தரையிறங்கியதாக அலறிய அறிவிப்பு சப்தம் கூட அம்ருவின் தூக்கத்தைக் கலைக்குமளவிற்கு பலம் பொருந்தியதாக இல்லை என்பதுதான் பரிதாபம்! விமான நிலைய நடைமுறைகளை முடித்துவிட்டு மனைவியுடன் காத்திருப்பு பகுதிக்கு வந்த ஹரிஷுக்கு, கண்மூடி ச...