ஆசிரியர் தின வாழ்த்துகள்

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், மகனோடு வந்துவிட்டேன். பேத்திகள் இருவரோடும் என் மீத வாழ்க்கை ஓர் நதியைப் போல அமைதியாகவே செல்கிறது. இன்று அருகிலுள்ள பூங்கா வரை சென்று வருகிறேனென, மருமகளிடம் கூறி விட்டு... காலணிகளை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். பாழாய்ப் போன மூட்டு வலி இருபதடி தூரம் கூட நடக்க விடவில்லை. பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்புற சாலையைக் கடந்தால் பூங்கா வரும். எனவே, பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து செல்ல எண்ணி போய் அமர்ந்தேன். பேருந்து வருவதும், காத்திருந்த மனிதர்கள் அவசர கதியில் சென்று தொற்றிக் கொள்வதும், மீண்டும் பேருந்து நிறுத்தம் ஆட்களால் நிறைவதுமாய்... அந்த காலை நேரம் பரபரப்பாய் இருந்தது. அனைத்து நிகழ்வுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என் விழிகளின் பேச்சைக் கேட்காத மனம்... பிடிவாதமாய் என் கடந்த காலத்திற்குள் சென்று விழுந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு வரை… இதோ என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நானும், காலை அலாரத்தின் அழைப்பில் எழுந்து… வீட்டில் உள்ள அனைவருக்கும் வேண்டிய தேவைகளை முடித்து, நிற்க நேரமில்லாமல் அவசர...